செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஜோதிட சூக்சுமங்கள் Part - 2.

சென்ற இடுகையில் மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டோம். இந்த மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு கும்ப ராசி. இதன் அதிபதி கிரகம் சனி பகவான். இந்த சனி பகவான் இந்த மேஷ லக்னக் காரர்களுக்குப் பாவங்களைச் செய்பவன். அதாவது கெடு பலன்களைச் செய்பவன். இப்படி கெடு பலன்களைச் செய்யும் இந்த சனி பகவான் சுப வீடுகளான லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளில் அமர்ந்தால் அந்த வீட்டின் காரக பலன்கள் கெடும்.

2ம் வீட்டில் அமர்ந்தால் தன வருவாய், குடும்பம் பாதிக்கும்.  இப்படி 2ம் வீட்டின் காரக பலன்கள் கெடும். 4ல் அமர்ந்தால் சொத்துக்களை இழக்க வைக்கும். தாயின் நிலை பாதிக்கப் படும். அல்லது தாயின் ஆதரவு கிடைக்காது என்ற வகையில் 4ம் வீட்டின் காரக பலன்கள் கெடும். 5ம் வீட்டில் அமர்ந்தால் புத்திரன் பாதிக்கப் படுவான். மற்றும் 5ம் வீட்டுக்கு என்னென்ன காரக பலன்கள் உண்டோ அவை யாவும் கெடும்.  7ல் அமர்ந்தால் சில நேரங்களில் திருமணம் என்ற ஒரு சுப நிகழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போகும். திருமணம் என்று ஒன்று நடந்தால் பிரியக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். 9ம் வீட்டில் அமர்ந்தால் அனுபவிக்கக் கூடிய பாக்கியங்கள் கெடும். தந்தையின் நிலை கெடும். அல்லது தந்தையால் உபயோகம் இருக்காது. 10ம் வீட்டில் அமர்ந்தால் தொழில் பாதிக்கும். உத்தியோகம் கிடைக்காது.

இப்படி மேற்கூறிய வீடுகளில் மேற்கூறிய வீடுகளின் அதிபதி கிரகங்களின் நட்சத்திரங்களில் நின்று நவாமசக வீட்டில் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்ற வீடுகளில் இடம் பெற்று நின்றால் இந்த பாதகாதிபதியான சனி சுப பலம் பெற்று கெடு பலன்களை அதிகமாகத் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் செய்து மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்க வைத்து அனைத்து செல்வங்களை யும் இழக்கும்படிச் செய்து விடுவான்.

அதே நேரம் இந்த பாதகாதிபதியான சனி பகவான் 6, 8, 12ம் வீடுகளில் நின்றால்  8, 12ம் வீட்டு காரகங்களைக் கெடுத்து  ஆயுளையோ, மாங்கல்ய பலத்தையோ கெடுத்து விடுவான். அவமானங்களைச் சந்திக்க வைப்பான். 6ம் வீட்டில் நின்றால் மட்டுமே முழுமையான சுப பலன்களைச் செய்வான். அதாவது 6ம் வீட்டுக்குரிய காரக பலன்களைக் கெடுத்து விடுவதால் 6ம் வீடு செய்யும் கெடு பலன்களிலிருந்து காப்பாற்றி விடுவான்.

சென்ற பாடத்தில் 10ம் வீட்டின் அதிபதியாகிய சனி பகவானும், 9ம் வீட்டின் அதிபதியாகிய குரு பகவானும் பரிவர்த்தனை பெற்று தர்ம, கர்மாதிபதி யோகத்தை எப்படிச் செய்வார்கள் என்று பார்க்கும் விஷயத்தில் குரு பகவானின் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் என்ன என்று பார்த்தோம்.

சனி பகவான் மேஷ லக்னத்திற்கு 9ம் வீடாகிய தனுசு ராசியில் இடம் பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. 

சனி பகவான் மூலம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் தனுசு ராசியில் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் நீச நிலை பெற வேண்டும்.  மூல நட்சத்திரம் 2ம் பாதத்தில் தனுசு ராசியில் நின்றால் நவாம்சக விட்டில் ரிஷப ராசியில் இடம் பெற வேண்டும். மூல நட்சத்திரம் 3ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் மிதுன ராசியில் இடம் பெற வேண்டும். மூல நட்சத்திரம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கடக ராசியில் இடம் பெறவேண்டும்.

சனி பகவான் மேஷ ராசிக்கு பாதகாதிபதி என்பதால் அவர் 10ம் வீடாகிய கர்ம வீட்டிற்கும் அதிபதியாக இருந்து 9ம் வீட்டிற்குரிய குரு பகவானுடன் தொடர்பு கொண்டு பரிவர்த்தனை பெற்றால் கூட பாக்கிய ஸ்தானத்தில் இவர் அமர்ந்து தனது வீடான 11ம் வீடான பாதக வீட்டைப் பார்வை இடும் போது பாக்கிய ஸ்தானத்தின் சுப பலன்களைக் கெடுத்து பாதக பலன்களையே செய்வார்.

ஆனாலும் இதில் இன்னும் சூக்சும விஷயங்கள் இருக்கின்றன. 

அதாவது சனி பகவான் மாத்திரம் இன்றி எந்த கிரகமாக இருந்தாலும் சரி அந்த கிரகம் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் பட்சத்தில் அதாவது இரு வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெறும் ஒரு கிரகத்திற்கு ஏதேனும் ஒரு வீடு பாதக ஸ்தானமாக வரும் பட்சத்தில் அந்த கிரகம் தனது திசா காலத்தில் பாதக பலன்களையே செய்யும்.

ஆகையால் அந்த கிரகம் நவாம்சக வீட்டில் கெட்டால்தான் அந்த கிரகத்திற்கு பாதக வீடு போக இன்னொரு வீடு சுப வீடாக இருந்தால் கூட அந்த வீடு சுப பலன்களைச் செய்ய வைக்க அந்த கிரகத்திற்கு அனுமதி கொடுக்கும்.

மேலே கூறிய விஷயத்தை மிக நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனி பகவான் மேஷ லக்னத்திற்கு 10, 11 ஆகிய வீடுகளுக்கு அதிபதியாகி 9ம் வீட்டில் இடம் பெற்று இருந்தாரேயானால் அவரது பார்வை 11ம் வீட்டில் பதியும் போது பாதக பலன்களைச் செய்வாரா? அல்லது 11ம் வீடு லாப வீடாகையால் லாப கரமான விஷயங்களைத் தனது திசா காலத்தில் செய்ய வைப்பாரா? என்று ஆராய்ந்தோமேயானால் அவர் நவாம்சக வீட்டில் கெட்டிருந்தால் மட்டுமே சுப பலன்களைத் தனது திசா காலத்தில் அள்ளி வழங்குவார். அதாவது அவர் இடம் பெற்றிருக்கும் 9ம் வீடு, அவர் அதிபதியாக இருக்கும் 10, 11 ஆகிய வீடுகளின் பலன்கள் இவை யாவும் சுபத்துவம் பெறும். ஆக தர்ம. கர்ம வீடுகளான 9, 10ம் வீடுகள் மட்டுமின்றி 11ம் வீடு லாபத்தை அள்ளி வழங்கும்.

ஆக மூல நட்சத்திரத்தில் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் இடம் பெற்று நீச நிலை பெறுவதாலும், மூலம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கடக ராசியில் இடம் பெற்று பகை நிலை பெறுவதாலும் இந்த சனி பகவான் கெட்டு விடுவதால் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் நன்மைகளை அள்ளி வழங்குவார்.

மூலம் 2, 3 பாதங்களில் நின்றால் நவாம்சக வீட்டில் ரிஷப ராசியிலும், மிதுன ராசியிலும் நட்புறவு பெறுவதால் சுப பலன் பெற்று கெடு பலன்களைத் தனது திசா புக்திக் காலங்களில் அள்ளி வழங்குவார்.   

அடுத்து பூராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் சிம்ம வீட்டில் இடம் பெற்று பகை நிலை பெறுவதால் சுப பலன்களைத் தனது திசா, புக்திக்  காலங்களில் செய்வார். பூராடம் 2, 3 பாதங்களில் நின்றால் நவாம்சக வீட்டில்  கன்னி ராசியில் இடம் பெற்று நட்புறவு பெறுவதாலும், துலா ராசியில் இடம் பெற்று உச்ச நிலை பெறுவதாலும் சுபத்துவம் பெற்ற இவர் தனது திசா, புக்திக் காலங்களில் கெடு பலன்களை அள்ளி வழங்குவார்.

உத்திராட நட்சத்திரம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டிலும் தனுசு ராசியிலேயே இடம் பெற்று வர்கோத்தம நிலை பெற்று சுபத்துவம் பெறுவதால் தனது திசா, புக்திக் காலங்களில் கெடு பலன்களை அள்ளி வழங்குவார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தர்ம, கர்மாதிபதி யோகம் என்பது எந்த வகையில் செயல்படுகிறது? என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

இனி அடுத்த பாடத்தில் இதே தர்ம, கர்மாதிபதி யோகம் என்பது இந்த 9, 10ம் வீடுகளுக்குரியவர்கள் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக இல்லாத பட்சத்தில் எப்படி சுப அல்லது அசுப பலன்களைச் செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.




ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஜோதிட சூக்சுமங்கள் Part-1.

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும் போதே இந்த ஜாதகம் எப்படிப் பட்டது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். பல ஜோதிடர்கள் பல விதமான யோகங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். மேலோட்டமாக யோகங்களை ராசிச் சக்கரத்தைக் கொண்டு மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதனை அவர்கள் புத்தகங்களில் வெளியிட்டு அதனை அனைவரும் நம்பி நடக்கக் கூடிய விஷயங்கள் யாவும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் போது நொந்து நூலாகி விடுகிறார்கள்.

பொதுவாக ஆயிரக் கணக்கான யோகங்கள் இருக்கின்றன. இங்கே இப்போது தர்ம கர்மாதி யோகத்தின் சூக்சும விஷயத்தைப் பற்றிக் கூறப் போகிறேன்.

தர்ம, கர்மாதி யோகம் என்பதன் விளக்கம்:

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 9ம் வீடு பாக்கிய ஸ்தானம் என்றும், தர்ம ஸ்தானம் என்றும் சொல்லப் படுகிறது. அதே போல் 10ம் வீடு கர்ம ஸ்தானம் என்று சொல்லப் படுகிறது.

இந்த தர்ம ஸ்தானத்திற்கு அதிபதி கிரகமும், கர்ம ஸ்தானத்திற்கு அதிபதி கிரகமும் தங்களது வீட்டை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மாற்றிக் கொள்வது அதாவது தங்களது வீட்டைப் பரிவர்த்தனை  செய்து கொள்வது என்பது தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்யும். அல்லது

இந்த இரு வீட்டிற்கு உரிய கிரகங்களும் இணைந்து தங்களது வீட்டைப்  பார்வையிட்டாலும் தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள்.அல்லது

தர்மாதிபதியும், கர்மாதிபதியும் சுப வீடுகளாகச் சொல்லப்படும் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் இடம் பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள். அதே போல் 2, 11ம் வீடுகளில் நின்றாலும் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டால் இந்த யோகத்தைச் செய்வார்கள்.

ஆனால் இது சுப பலனைச் செய்கின்ற யோகமா? அல்லது அசுப பலனைச் செய்கின்ற யோகமா? என்பதைத்தான் ஆராய வேண்டும்.

ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை அவ யோகத்தையும் யோகம் என்றுதான் சொல்கிறது. இப்போது சூக்சும பலனுக்கு வருவோம்.

ஏற்கனவே சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு 11, 9, 7 ஆகிய வீடுகள் பாதக ஸ்தானமாக செயல்படும் என்று கூறியிருக்கிறேன். அதே போல் தர்ம், க்ர்ம அதிபதிகள் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம், க்ர்மாதிபதி யோகத்தைச் செயவார்கள் என்றும் மேலே கூறியிருக்கிறேன்.

ஆகையினால் தர்ம, கர்ம அதிபதிகளில் இருவருமோ அல்லது ஒருவராவதோ இந்த பாதக ஸ்தானங்களில் ஏதெனும் ஒன்றில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்தால் அவயோகங்களைத் தனது திசா காலத்தில் அந்த ஜாதகரை அனுபவிக்க வைப்பான் என்பதுதான் உண்மை. இதிலும் இன்னும் சூக்‌ஷும விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு சர லக்னத்தை எடுத்துக் கொண்டோமேயானால்  அந்த  சர லக்னத்திற்கு 11மிடமான பாதக ஸ்தானத்தில் 9ம் வீட்டுக்குரியவன் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் இந்த லக்னத்திற்கு 11ம் வீடாகிய கும்ப ராசி பாதக ஸ்தானமாக வரும். இந்த வீட்டில் இந்த மேஷ லக்னத்திற்கு 9ம் வீட்டுக்குரிய குரு பகவான் அமர்ந்திருந்தால் அவர் தனது திசா புக்திக் காலத்தில் என்ன செய்வார்? என்று பார்க்கலாம்.

எப்போதுமே பலன்களைத் துல்லியமாக அதாவது சூக்சுமமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 11ம் வீடு லாபஸ்தானம். பாக்கியாதிபதி  லாபஸ்தானத்தி
லிருந்து கொண்டு அவனது திசா காலத்தில் அள்ளிக் கொடுக்கப் போகிறார் என்று பகல் கனவு கண்டு இருக்கும் செல்வத்தையும் கோட்டை விட்டு விட்டு அந்த ஜோசியர் சொன்னார், இந்த ஜோசியர் சொன்னார் என்று அகலக்கால் வைத்ததனால் வந்த பலனை அனுபவித்து அல்லல் பட்ட பிறகே, “ஆஹா! நமக்கு நடந்தது யோகமல்ல. அவ யோகம்” என்று நினைத்து நொந்து நூலாகிப் போகிறார்கள்.

இங்கேதான் சூக்சும விஷயத்தை யோசிக்க வேண்டும். 11மிடம் பாதக ஸ்தானமாக வரும் நிலையில் லாப ஸ்தானமாக செயல்படாது. அதே போல் 9ம் வீடு பாதக ஸ்தானமாக வரும் பொழுது பாக்கிய ஸ்தானமாக செயல்படாது. அதே போல் 7மிடம் பாதக ஸ்தானமாக வரும் போது களஸ்திர ஸ்தானமாக செயல் படாது.

11மிடம் லாபத்தைக் கெடுக்கும். 9மிடம் பாக்கியத்தைக் கெடுக்கும். 7மிடம் களஸ்திரத்தைக் கெடுக்கும்.

இன்னும் சூக்சும விஷயங்கள் இருக்கின்றன.  சுப வீடுகள் என்று சொல்லப் படும் திரிகோண ஸ்தானங்கள், கேந்திர ஸ்தானங்கள், லாபம் என்று சொல்லும் 11ம் வீடு, தன வருவாய்க்குரிய 2ம் வீடு இவை யாவுமே சிற்சில சமயங்களில் துன்பத்தைத் தனது திசா காலங்களில் கொடுப்பதுண்டு. அதாவது சுப வீடுகளுக்குரிய கிரகங்கள் பாதக ஸ்தானங்களிலோ அல்லது ருண ரோக ஸ்தானமான 6ம் வீட்டிலோ, அல்லது பாதக வீட்டதிபதியின் நட்சத்திரத்திலோ, அல்லது 6ம் வீட்டதிபனின் நட்சத்திரத்திலோ நின்றால் அவர்களும் கெடு பலன்களையே தனது திசா காலத்தில் செய்வார்கள்.

இப்போது தர்ம கர்மாதி யோகத்தைப் பற்றிப் பார்ப்போம். 9ம் வீட்டுக்குரிய குரு பகவான் 10ம் வீடாகிய மகரத்திலும், 10ம் வீட்டுக்குரிய சனி பகவான் தனுசு ராசியிலும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த 9, 10க்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்று எப்படி தர்ம, கர்மாதிபதி யோகத்தை எப்படிச் செய்வார்கள்?  என்று பார்க்கலாம்.

அதாவது 10ம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவான் ராசிச் சக்கரத்தில் மகர ராசியில் நீச நிலை அடைகிறார். இந்த ராசியில் உத்திராடம் 2, 3, 4 பாதங்களும், திருவோணம் 1, 2, 3, 4 பாதங்களும், அவிட்டம் 1, 2 பாதங்களும் இடம் பெறுகின்றன.

இவற்றில் குரு பகவான் மகர ராசியில் ராசிச் சக்கரத்தில் இடம் பெற்று உத்திராடம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டிலும் அதே நீச நிலையில் மகர ராசியிலேயே இடம் பெற்று பலமிழந்த நிலையில் பாக்கிய ஸ்தானங்களுக்குரிய நன்மைகளையும் 10ம் வீட்டிற்குரிய நனமைகளையும் செய்ய முடியாமல் அந்த வீடுகளுக்குரிய காரக பலன்கள் கெட்டு கெடு பலன்களையே தனது திசா காலத்தில் செய்வார். 

உத்திராடம் 3ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கும்ப ராசியில் நட்புறவுக்குரிய சனி பகவானின் வீட்டில் நின்று நட்பு நிலை பெறுகிறார்.  முதலில் ராசியில் நீச நிலை பெற்று கெட்டவனாகி கெடு பலனைச் செய்ய வேண்டும் என்று அவர் நினக்கும் போது நவாம்சக வீட்டில் நட்புறவுக்குரிய சனி பகவானின் வீட்டில் நின்றால் நண்பனானவன் “ நீ என்ன செய்ய வேண்டுமோ செய்” என்று இடம் கொடுக்கும் போது குரு பகவான் கெடு பலன்களை குதி போட்டுக் கொண்டு செய்வார். ஆகையால் இவர் நவாம்சக வீட்டில் பகை நிலை பெற்றால்தான் நன்மை உண்டு. இவரால் கெடு பலன்களைச் செய்ய முடியாமல் போகும்.

உத்திராடம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் தனது ஆட்சி வீடான மீன ராசியில் நின்று நீச பங்க ராஜ யோகம் பெற்று 9, 10ம் வீட்டுக்குரிய காரக பலன்களைத் தனது திசா காலத்தில் சுப பலன்களாக மிகச் சிறப்பாகச் செய்வார்.

இதே போல் திருவோணம் 1ல் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் இடம் பெற்று நட்புறவோடு  9, 10ம் வீடுகளுக்குரிய காரக பலன்களை கெடு பலன்களாகச் செய்வார்.

இப்போது இவர் திருவோணம் 2ம் பாதத்திலும், 3ம் பாதத்திலும் ஏதேனும் ஒன்றில் நின்றால் நவாமசக வீட்டில் ரிஷபத்திலோ அல்லது மிதுனத்திலோ இடம் பெறுவார்.  ராசியில் நீசம் பெற்ற இந்த குரு பகவான் நவாமசக வீட்டில் மேலே சொன்ன இருவீடுகளிலும் பகை நிலை பெற்றுசுப பலன்களைச் செய்வார்.

திருவோணம் 4ம் பாதத்தில் இடம் பெற்றால் நவாம்சக வீட்டில் உச்சம் பெற்று நீச பங்க ராஜ யோகம் பெற்றுத் தனது திசா காலத்தில் மிக அதிகமான சுப பலன்களைச் செய்து குபேரனாக்குவான்.
அவிட்டம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் சிம்ம ராசியில் இடம் பெற்று  நட்புறவு பெறுவதால் அசுப பலன்களையே செய்வான்.

அவிட்டம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கன்னி ராசியில் இடம் பெற்று பகை நிலை பெற்று சுப யோகத்தைச் செய்வான்.

ஆகையினால்தான் யோகம் சுப யோகமா? அவ யோகமா? என்பதை நன்கு ஆராய வேண்டும். 
இனி சனி பகவான் 9ம் வீட்டில் இடம் பெற்று என்ன மாதிரியான பலன்களைச் செய்யப் போகிறார்? என்று பார்க்கலாம்.

சனி, 9 நவம்பர், 2013

ஜோதிடப் பாடம் 10

சென்ற பாடத்தில் சர, ஸ்திர, உபய  லக்னங்களுக்கு
உரிய பாதக ஸ்தானங்கள் பற்றிப் பார்த்தோம். அதோடு ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய காரக பலன்கள் பற்றிப் பார்த்தோம்.

மொத்தம் 27 நட்சத்திரங்கள். 9 கிரகங்கள். இந்த 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களையும் தத்தமக்கு 3 நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் தமக்குரிய நட்சத்திரங்களாகக் கொண்டுள்ளன. கிரகங்கள் தாம் நிற்கும் நட்சத்திரங்களின் அதிபதி கிரகங்களின் தன்மைக்கேற்ப பலன்களைத் தமது திசா புக்திக் காலங்களில் செய்கிறார்கள்.

சூரியனுக்குரிய நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.

சந்திரனுக்குரிய நட்சத்திரங்கள் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.

செவ்வாய்க்குரிய நட்சத்திரங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்.

புதனுக்குரிய நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி.

குரு என்ற வியாழனுக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.

சுக்கிரன் என்ற வெள்ளிக்குரிய நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்.

சனி பகவானுக்குரிய நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

ராகு பகவானுக்குரிய நட்சத்திரங்கள் திருவாதிரை, ஸ்வாதி, சதயம்.

கேது பகவானுக்குரிய நட்சத்திரங்கள் அஸ்வனி, மகம், மூலம்.

இப்படி மேலே கூறிய நட்சத்திரங்களை தமக்குரிய நட்சத்திரங்களாகக் கிரகங்கள் கொண்டுள்ளன.   
                               சூரிய பகவான்.

நவகிரகங்களில் முதன்மையானவன் சூரிய பகவான். இவனை ஆத்மகாரகன் என்று சொல்வார்கள். இது ஒரு நெருப்பு கிரகமாகும். இவருடைய காரக பலன்கள் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். மறந்து போய் விட்டது என்றால் மீண்டும் சென்ற பாடத்தைப் படித்துப் பார்க்கவும். முக்கியமாக இவர் பிதுர்காரகன் ஆவார். அதாவது தந்தையைப் பற்றிச் சொல்வார். நவ ரத்தினக் கற்களில் மாணிக்கம் இவருக்குரியது. இவர் மேஷ ராசியில் உச்சமடைகிறார். துலா ராசியில் நீசம் அடைகிறார். சிம்மம் இவருக்கு ஆட்சி வீடு. இவருக்குரிய எண்: 1.

மேஷ லக்னத்திற்கு இவர் 5ம் வீட்டிற்கு உரியவர். அதாவது புத்திர ஸ்தானத்திற்கு உரியவர்.  5ம் வீட்டு காரக பலன்கள் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். மறந்து போய் விட்டது என்றால் மீண்டும் சென்ற பாடத்தைப் படித்துப் பார்க்கவும். இந்த சூரியன்  ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம். 
                           சந்திர பகவான்.

நவகிரகங்களில் அடுத்தவர் சந்திர பகவான். இவனை மனோ காரகன் என்று சொல்வார்கள். இவன் நீருக்கு உரியவன். இவர் மாதுர் காரகன் ஆவார். அதாவது தாயைப் பற்றிச் சொல்வார். இவரது காரக பலன்கள் பற்றி ஏற்கனவே சென்ற பாடத்தில் கொடுத்திருக்கிறேன். மறந்து விட்டால் திரும்பப் படித்துப் பார்க்கவும். நவரத்தினக் கற்களில் இவருக்குரியது முத்து. இவர் நீருக்கு உரியவர். இவர் ரிஷ்ப ராசியில் உச்சமடைகிறார். விருச்சிக ராசியில் நீசம் அடைகிறார்.  கடகம் இவருக்கு ஆட்சி வீடு. இவருக்குரிய எண்: 2.

மீன லக்னத்திற்கு இவர் 5ம் வீட்டிற்கு உரியவர். அதாவது புத்திர ஸ்தானத்திற்கு உரியவர்.  5ம் வீட்டு காரக பலன்கள் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். மறந்து போய் விட்டது என்றால் மீண்டும் சென்ற பாடத்தைப் படித்துப் பார்க்கவும். இந்த சந்திரன்  ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம்.
                   செவ்வாய் பகவான்.

அடுத்து செவ்வாயைப் பற்றிப் பார்க்கலாம். இவர் சகோதரனுக்குக் காரகன். சகோதரனைப் பற்றிச் சொல்வார். நெருப்புக்கு உரியவர்.  சூரிய, சந்திரனுக்கு ஒரே வீடு. இவருக்கு இரு வீடுகள். மேஷமும், விருச்சிகமும் இவரது ஆட்சி வீடுகள். மகரம் இவருக்கு உச்ச வீடு. கடகம் இவருக்கு நீச வீடு. நவரத்தினக் கற்களில் இவருக்கு உரியது பவளம். இவருக்கு உரிய எண்: 9.

தனுசு லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் இவர் 5ம் வீட்டுக்கு உரியவர். இவர் ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம். 
                                  புத பகவான்.

அடுத்து புதனைப் பற்றிப் பார்க்கலாம். இவர் ஒரு அலி கிரகம். இவர் கல்விக்
கும், கணிதத்திற்கும் காரகன். மாமன், அத்தைக்குக் காரகன். இவருக்கும் இரு வீடுகள். கன்னியும், மிதுனமும் இவருடைய ஆட்சி வீடுகள். மிதுனம் உச்ச வீடும் கூட. மீனம் நீச வீடு.  நவரத்தினங்களில் இவருக்கு உரியது மரகதப் பச்சை. இவருக்கு உரிய எண்: 5.

கும்ப லக்னத்திற்கும், ரிஷப லக்னத்திற்கும் இவர் 5ம் வீட்டுக்குரியவர்.  இவர் ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம்.
                          குரு பகவான்.

அடுத்து குரு பகவான் பற்றிப் பார்க்கலாம். இவர்  தன காரகன் என்றும், புத்திர காரகன் என்றும் அழைக்கப் படுகிறார். இவருக்கும் இரு வீடுகள். தனுசு, மீனம் இரண்டும் இவரது ஆட்சி வீடுகள். கடகம் இவரது உச்ச வீடு. மகரம் இவரது நீச வீடு.  நவரத்தினக் கற்களில் இவருக்குரியது கனக புஷ்பராகம் அல்லது மஞ்சள் புஷ்பராகம். இவருக்கு உரிய எண்: 3.

சிம்ம லக்னத்திற்கும், விருச்சிக லக்னத்திற்கும் இவர் 5ம் வீட்டுக்குரியவர். இவர் ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம்.
                                சுக்கிர பகவான்.

அடுத்து சுக்கிர பகவான் பற்றிப் பார்க்கலாம். இவர் களஸ்திர காரகன் என்று அழைக்கப் படுகிறார். இவருக்கும் இரு வீடுகள்.  ரிஷபம், துலாம் இரண்டும் இவரது ஆட்சி வீடுகள். மீனம் இவரது  உச்ச வீடு. கன்னி இவரது நீச வீடு. நவரத்தினக் கற்களில் இவருக்குரியது வைரம். இவருக்கு உரிய எண்; 6.

மகர லக்னத்திற்கும், மிதுன லக்னத்திற்கும் இவர் 5ம் வீட்டுக்குரியவர். இவர் ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம்.
                                      சனி பகவான்.

அடுத்து சனி பகவான் பற்றிப் பார்க்கலாம். இவர் ஆயுள் காரகன் என்று அழைக்கப் படுகிறார். இவருக்கும் இரு வீடுகள். மகரம், கும்பம் இரண்டும் இவரது ஆட்சி வீடுகள். துலாம் இவரது உச்ச வீடு. மேஷம் இவரது நீச வீடு. நவரத்தினக் கற்களில் இவருக்குரியது நீலம். இவருக்குரிய எண்: 8.

கன்னி லக்னத்திற்கும்,  துலாம் லக்னத்திற்கும் இவர் 5ம் வீட்டுக்குரியவர். இவர் ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம்.
                ராகு பகவான்.

அடுத்து ராகு பகவானைப் பற்றிப் பார்க்கலாம். இவர் யோக காரகன் என்று அழைக்கப் படுகிறார்;. இவருக்கு வீடு கிடையாது. இவர் விருச்சிக ராசியில் உச்சமடைகிறார். ரிஷப ராசியில் நீசம் அடைகிறார். நவரத்தினக் கற்களில் இவருக்குரியது கோமேதகம். இவருக்குரிய எண்: 4.
 
கேது பகவான்.

அடுத்து கேது பகவானைப் பற்றிப் பார்க்கலாம். இவர் ஞான காரகன் என்று அழைக்கப் படுகிறார். இவருக்கும் வீடு கிடையாது. இவர் ரிஷப ராசியில் உச்சம் அடைகிறார். விருச்சிக ராசியில் நீசம் அடைகிறார். நவரத்தினக் கற்களில் இவருக்குரியது வைடூரியம்.

இவர்கள் இருவரும்  ஒவ்வொரு லக்னத்திற்கும்  எந்த விதமாக இடம் பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வார் என்பதை வரும் பாடங்களில் பார்க்கலாம். 

இனி கிரகங்கள் எப்படி எப்படி தனது பலன்களைச் செய்கின்றன என்ற சூக்சும விஷயங்களை இனி வரும் பாடங்களில் பார்க்கலாம்.





வெள்ளி, 1 நவம்பர், 2013

ஜோதிடப் பாடம் 9.

இது வரை 12 ராசிகளும் நமக்கு என்ன விதமான பலன்களைச் செய்கின்றன என்றும் அந்த பலன்களுக்குரிய கிரகங்கள் என்னென்ன என்றும் பார்த்தோம். அதாவது ஒரு பலனை ஒரு ராசி செய்கிறது என்றால் அந்த வீட்டின் பலனை அதில் இடம் பெற்றிருக்கும் கிரகமும் சேர்ந்து செய்யும் என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்த உடன் அந்த மனிதனின் ஜாதகத்தில் இடம் பெறும் கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இடம் பெறுகின்றனர் என்பதையும் அந்த ராசியின் பலன் என்ன என்பதையும் அந்த ராசியில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் எந்தெந்த விதத்தில் நன்மை அல்லது தீமை செய்கின்றன என்பதையும் மிகத் துல்லியமாக ஆராய வேண்டும்.
ஏற்கனவே 12 ராசிகளின் பெயர்களையும் அவற்றின் அதிபதி கிரகங்களையும் பற்றிக் கூறியிருக்கிறேன். மீண்டும் நியாபகப் படுத்துகிறேன்.
மேஷ, விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய்.
ரிஷப, துலா ராசிகளின் அதிபதி சுக்கிரன்.
மிதுன, கன்னி ராசிகளின் அதிபதி புதன்.
கடக ராசிக்கு அதிபதி சந்திரன்.
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்.
தனுசு, மீன ராசிகளின் அதிபதி வியாழன் என்ற குரு பகவான்.
மகர, கும்ப ராசிகளின் அதிபதி சனி பகவான்.
அதோடு இந்த 12 ராசிகளில் லக்னம் எதுவோ அதுவே முதல் வீடு என்றும் கூறியிருக்கிறேன். அதோடு இன்னும் சில விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மேஷம், கடகம், துலாம், மகரம் என்ற இந்த 4 ராசிகளையும் சர ராசிகள் என்றும்,
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் என்ற இந்த 4 ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும்,
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் என்ற இந்த 4 ராசிகளையும் உபய ராசிகள் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இதைப் பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
லக்னமாகிய முதல் வீடு மற்றும் 4, 7, 10 ஆகிய வீடுகள் யாவும் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
அதே லக்னமாகிய முதல் வீடு மற்றும் 5, 9 ஆகிய வீடுகள் யாவும் திரிகோண ஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
லக்னமாகிய முதல் வீடு கேந்திர ஸ்தானத்திலும், திரிகோண ஸ்தானத்திலும் இடம் பெறுவதால் லக்னாதிபதி முழு சுபராகிறார்.
அதே போல் கேந்திர ஸ்தானங்களின் அதிபதிகளும் திரிகோண ஸ்தானங்களின் அதிபதிகளும் முழு சுபர்களாகிறார்கள்.
சென்ற பாடத்தில் 12 ராசிகளும் சொல்லும் விஷயங்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
அதன் படிப் பார்க்கும் போது லக்னம், 2வது வீடாகிய தன ஸ்தானம், 4வது வீடாகிய கேந்திர ஸ்தானம், 5வது வீடாகிய திரிகோண ஸ்தானம், 7வது வீடாகிய களஸ்திர மற்றும் கேந்திர ஸ்தானம், 9வது வீடாகிய திரிகோண மற்றும் பாக்கிய ஸ்தானங்கள், 11வது வீடாகிய லாப ஸ்தானம் இவை யாவும், மற்றும் இவற்றின் அதிபதிகள் யாவும் கெடக் கூடாது.
மேலே கூறிய வீடுகளோ அல்லது அவற்றின் அதிபதி கிரகங்களோ கெடக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டால் அதற்கான பதில் இதோ.
ஜோதிட சாஸ்திரத்தில் 3, 6, 8, 12ம் வீடுகள் பற்றியும், பாதக ஸ்தானைங்கள் பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
இதில் முழுமையாக கெட்ட வீடு என்ற வகையில் 6ம் வீடும், பாதக ஸ்தானங்களும் கெடு பலனைச் செய்கிற வீடுகளாகும். 3ம் வீடு தைரியத்திற்கும், வெற்றி தோல்விகளுக்கும் உரிய வீடு என்பதால் அந்த வீட்டில் இடம் பெறும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த வீட்டின் அதிபதி கிரகம் இடம் பெறும் ராசியைப் பொறுத்தும், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன.
அதே போல் 8ம் வீடு ஆயுளைப் பற்றியும், மாங்கல்ய பலத்தைப் பற்றியும் சொல்வதால் மேலே கூறிய மாதிரி அந்த வீட்டில் இடம் பெறும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த வீட்டின் அதிபதி கிரகம் இடம் பெறும் ராசியைப் பொறுத்தும், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன.
அதே போல் 12ம் வீடு நிம்மதியான சாப்பாட்டிற்கும், தூக்கத்திற்கும் உரிய அயன, சயன போக ஸ்தானமாகையால் மேலே கூறிய மாதிரி அந்த வீட்டில் இடம் பெறும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த வீட்டின் அதிபதி கிரகம் இடம் பெறும் ராசியைப் பொறுத்தும், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன.
ஒரு ஜாதகத்தில் சர ராசிகளான மேஷமோ, கடகமோ, துலா ராசியோ, மகர ராசியோ லக்னமாக இருந்தால் லாப ஸ்தானமாகிய 11ம் வீடும், அதன் அதிபதியும் கெடுபலன்களைச் செய்யும்.
மேஷம் லக்னமாக இருந்தால் 11வது வீடான் கும்ப ராசியும், அதன் அதிபதியான சனி பகவானும் கெடு பலன்களைத் தனது திசா அல்லது புக்திக் காலத்தில் செய்வார்கள்.
கடகம் லக்னமாக வந்தால் 11வது வீடான ரிஷப ராசியும் அதன் அதிபதியான சுக்கிர பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள்.
துலாம் லக்னமாக வந்தால் 11வது வீடான சிம்ம ராசியும் அதன் அதிபதியான சூரியனும் தனது திசா, புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள்.
மகரம் லக்னமாக வந்தால் 11வது வீடான விருச்சிக ராசியும் அதன் அதிபதியான செவ்வாய் பகவானும் தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள்.
இதே போல் ஒரு ஜாதகத்தில் ஸ்திர ராசிகளான ரிஷபமோ, சிம்மமோ, விருச்சிகமோ, கும்பமோ லக்னமாக இருந்தால் அந்தந்த ராசிகளின் திரிகோண ஸ்தானமான மற்றும் பாக்கிய ஸ்தானமான 9ம் வீடும், அந்த வீட்டுக்குரிய அதிபதியும் தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள்.
ரிஷபம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய மகர ராசியும், அதன் அதிபதியான சனி பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள்.
சிம்மம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய மேஷ ராசியும், அதன் அதிபதியான செவ்வாய் பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள்.
விருச்சிகம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய கடக ராசியும், அதன் அதிபதியான சந்திர பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள்.
கும்பம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய துலா ராசியும், அதன் அதிபதியான சுக்கிர பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள்.
இதே போல் ஒரு ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவற்றில் ஏதேனும் ஒன்று லக்னமாக வந்தால் இவற்றின் நேர் 7ம் வீடான கேந்திர, மற்றும் களஸ்திர ஸ்தானமும், அதன் அதிபதி கிரகமும் தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும்.
மிதுனம் லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான தனுசு ராசியும் அதன் அதிபதி கிரகமான குரு என்ற வியாழ பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும்.
கன்னி லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான மீன ராசியும் அதன் அதிபதி கிரகமான குரு என்ற வியாழ பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும்.
தனுசு லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான மிதுன ராசியும் அதன் அதிபதி கிரகமான புத பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும்.
மீனம் லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான கன்னி ராசியும் அதன் அதிபதி கிரகமான புத பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும்.
இப்படி சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு சுப வீடுகள் என்ற வரிசையில் வரும் 11, 9, 7 ஆகிய வீடுகளே கெட்ட பலன்களைச் செய்யும் வீடுகளாகவும் அதன் அதிபதி கிரகங்களூமே கெட்ட பலன்களைச் செய்பவர்களாகவும் வருகிறார்கள்.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் இரண்டு வீடுகளின் ஆதிபத்தியங்கள் உண்டு. அதாவது சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இரு வீடுகளுக்குரிய கிரகங்களாக வருவதனால் இரு வீட்டு பலன்களைச் செய்யும்.
அப்படி இரு வீடுகளுக்கு உரிய கிரகம் இரண்டு வீடுகளூமே சுப வீடுகளாக இருந்தும் கூட ஒரு வீடு பாதக வீடாக அதாவது பாதக ஸ்தானமாக வரும் பட்சத்தில் அந்த கிரகம் பாதக பலன்களை அதாவது கெடு பலன்களை மட்டுமே தனது திசா அல்லது புக்திக் காலங்களில் செய்யும்.
ஆகையினால் அந்த கிரகம் ராசியில் அதாவது ராசிச் சக்கரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி நவாம்சக வீட்டில் கெட வேண்டும்.
ஆனால் பாதகாதிபதியாக வரும் ஒரு கிரகம் ராசியில் 6ம் வீட்டில் நிற்பது நன்மை செய்யும். அப்போது இந்த பாதகாதிபதி நவாம்சக வீட்டில் கெடாமல் சுப பலம் பெற வேண்டும்.
அதே நேரம் 6ம் வீட்டுக்கும் இன்னொரு சுப வீட்டிற்கும் உரிய கிரகம் நவாம்சக வீட்டில் சுப பலம் பெற வேண்டும்.
6ம் வீட்டிற்குரியவன் பாதக ஸ்தானத்திலோ அல்லது பாதக ஸ்தானத்திற்குரியவன் 6ம் வீட்டிலோ ராசியில் நிற்பது நன்மை தரும். அப்போது அவன் நவாமசக வீட்டில் சுப பலம் பெற வேண்டும்.
இதன் விளக்கங்களை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.





செவ்வாய், 29 அக்டோபர், 2013

ஜோதிடப் பாடம் 8


சென்ற பாடத்தில் மேஷ லக்னம் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய். மற்றும் 8ம் வீட்டிற்குரியவன் செவ்வாய். 8ம் வீடு விருச்சிக ராசி. 2ம் வீடு மற்றும் 7ம் வீட்டிற்குரியவன் சுக்கிரன். 2ம் வீடு ரிஷப ராசி. 7ம் வீடு துலாம் ராசி. 3, 6ம் வீட்டிற்குரியவன் புதன். 3ம் வீடு மிதுன ராசி. 6ம் வீடு க்ன்னி ராசி. 4ம் வீட்டிற்குரியவன் சந்திரன். 4ம் வீடு கடக ராசி. 5ம் வீட்டிற்குரியவன் சூரியன். 5ம் வீடு சிம்ம ராசி. 9, 12ம் வீட்டிற்குரியவன் குரு என்ற வியாழ பகவான். 9ம் வீடு தனுசு ராசி. 12ம் வீடு மீன ராசி. 10, 11ம் வீடுகளுக்குரியவன் சனி பகவான். 10ம் வீடு மகர ராசி. 11ம் வீடு கும்ப ராசி.
பொதுவாக 12 வீடுகளுக்கும் அதாவது 12 ராசிகளுக்கும் காரக பலன் என்று உண்டு. அதே போல் 9 கிரகங்களுக்கும் காரக பலன் என்று உண்டு.
காரக பலன் என்றால் 12 ராசிகளும், 9 கிரகங்களும் என்னென்ன விஷயங்கள் பற்றிச் சொல்கிறது என்று அர்த்தம்.
லக்னம் என்ற முதல் வீடு தலை, உடல், உயிர், அவயவங்கள், சுபாவம், ஆயுள், சந்தோஷம், அறிவு, பிரபலம், கெளரவம், பலம், ஆரோக்கியம், செயல் திறன், சுய மரியாதை, கர்வம், அமைதி, பாண்டித்யம், வருத்தம், அதிருப்தி, இழுக்கு, கண்ணியம்,வயது,ரூபம் (தோற்றம்), நிறம், வடுக்கள், சுகம், துக்கம், சாகஸம் இவை பற்றிச் சொல்லும். இதைத்தான் காரக பலன்கள் என்கிறோம். இவை யாவற்றிற்கும் காரகர் சூரிய பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 2ம் வீடு பெரும் செல்வம், பருவம், நெற்றி, மனைவி, முகம், வாக்கு, வலது கண், படிப்பு, உணவு, தன வருவாய், குடும்பம், சொல்வன்மை, உண்மை, நேர்மை, நாக்கு, மூக்கு, பாண்டித்யம், வித்தை, நண்பர்கள், குடும்ப உறவு, திடபுத்தி, வியாபாரத்தில் வருவாய், செல்வம் சேமிப்பு, பரோபகார சிந்தனை, திட மனது, பணிவு, சாஸ்திரங்களில் நம்பிக்கை, சிக்கனம், பொய், கபடு, கலை இவற்றைப் பற்றிச் சொல்லும். இவையே இந்த 2ம் வீட்டின் காரக பலன்கள். இவற்றிற்கு காரகர் குரு என்ற வியாழ பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 3ம் வீடு வீரம், இளைய சகோதரம், வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது நோய், இசை, துணைவர், ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, கனவுகள், தெளிவு, உறவினர்கள், அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவற்றைப் பற்றிச் சொல்லும். இவையே இந்த வீட்டின் காரக பலன்கள். இவற்றிற்கு காரகர் செவ்வாய் பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 4ம் வீடு தாய், கல்வி, வாகனங்கள், சொத்துக்கள், சுகம், வீடு, நிலம், தோட்டம், கிணறு, நீர் நிலை, பால், பவளம், நன்னடத்தை, ஒழுக்கம் கெடுதல், வேத சாஸ்திரங்களை விருத்தி செய்தல், உயர் கல்விப் படிப்பு, உறவினர்கள், நண்பர்கள், கலை, இலக்கியம், மகிழ்ச்சியான் வாழ்க்கை, ஆடை, ஆபரணம், கால் நடைகள், செல்வம், தந்தையின் ஆயுள், சேமிப்பு, நல்லறிவு, சுகக் கேடுகள், மனைவியுடன் அந்தரங்க வாழ்க்கை, அல்லது மனைவி அல்லாதவளுடன் திருட்டு சுகம் அனுபவித்தல் இவற்றைப் பற்றிச் சொல்லும். இவையே 4ம் வீட்டு காரக பலன்கள். இவற்றிற்கு காரகர் சந்திர பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 5ம் வீடு பூர்வ புண்ணியம், புத்திரம், நன்னடத்தை, புத்தி கூர்மை, விவேகம், மந்திரம் கற்றல், மந்திரப் பிரயோகம், உபாசனை, பாவ புண்ணியம் பார்த்தல், பாண்டித்யம், ஆழ்ந்த சிந்தனை, பரம்பரைப் பதவி, உல்லாசம், சந்தோஷம், இலக்கியத்தில் புலமை, நீண்ட நூல்களை எழுதுதல், தந்தை வழி வம்ச விருத்தி, சாஸ்திர விருத்தி, அன்பு, ஹ்ருதயம், மார்பு, பிரபுத்துவம், தந்தை, தாய் மாமன், மந்திர சாஸ்திரம், முற்பிறப்பில் செய்த நற்செயல்கள், புத்திர, புத்திரிகள், புலவர்களால் பாராட்டிப் பாடப் பெறுதல், தவம், முன் ஜென்மம், தனம், புத்திர வர்க்கம் ஆகியவை பற்றிச் சொல்கிறது. இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான்.
இனி லக்னத்திலிருந்து 6ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். கடன், வஞ்சனை, காயம், பசி, எதிரி, நோய், தடை, தாமதங்கள், தாய் மாமன், கொடூரச் செயல், அவதூறு, எதிரியின் மகிழ்ச்சி, எதிரியால் நஷ்டம், யுத்தம், மனக் கவலை, வேதனை, அகால போஜனம், உறவினருடன் கருத்து வேறுபாடு, அனைவராலும் வெறுக்கப் படுதல், சோம்பேறித்தனம், உடல் வீக்கம், களைப்பு, சிக்கனம், அடிமை, கடின உழைப்பு, உட்பகை, பங்காளிகளுடன் வழக்காடுதல், ஆயுத பயம், திருடர்களால் பயம், அரசாங்க சிறைத் தண்டனை ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான்.
இனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். களஸ்திரம், திருமணம், காதல், அனைவரும் வசியமாதல், வியாபாரம், வாடிக்கையாளர்கள், பகைவர்களின் அழிவு, நீண்ட பிரயாணம், அன்பளிப்பு, பாலுறுப்புக்கள், இரு மனைவிகள், மரணம், வெற்றி, தத்துப் புத்திரன், பணப் பாதுகாப்பு, பாலுறவு, வாக்குவாதம், கற்பு நிலை, திருட்டு, அதிகாரம் குறைதல், சுகபோகம், சுகமான திருமணம், திருமணம் நடைபெறும் திசை, சிற்றின்பம் ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிர பகவான்.
இனி லக்னத்திலிருந்து 8ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அவமானம், தூக்கம், கொலை, ஆயுள், கலகம், கெட்டபெயர், துன்பம், மரணம், விவகாரம், ஆபத்து, நீடித்த நோய், பண விரையம், வீண் பொழுது போக்கு, எதிர்பாராதது நடைபெறுதல், சொம்பேறித்தனம், பாவச் செயல்களைச் செய்தல், அங்ககீனம், கடும் வேதனை ஆகியவற்றை அறியலாம். பொதுவாக 8ம் பாவம் ஆயுளைப் பற்றிச் சொல்லும். இவை அனைத்திற்கும் காரகர் சனி பகவான். இனி லக்னத்திலிருந்து 9ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். இந்த வீட்டிற்கு தர்ம ஸ்தானம் என்ற பெயரும் உண்டு. தர்மம், நல்லொழுக்கம், புண்னிய தீர்த்தங்களை நாடுதல், தவம், மற்றவரை அல்லது பெரியவரை மதித்தல், நல்ல தெளிவான புத்தி, பக்தி, முயற்சி பலிதம். அபூர்வ விஷயங்கள், செல்வச் செழிப்பு, பெருந்தன்மை, மதிப்பு, மரியாதை, சத்சங்கம், மகிழ்ச்சி, தகப்பனார் வழிச் சொத்து, குதிரைகள், யானைகள், கறவை மாடுகள், அந்தணர்க்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளுதல், யாகங்களை மேற்கொள்ளுதல், பணப் புழக்கம், பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளுதல், கோவில் திருப்பணி, மந்திர உபதேசம், அஷ்டமாசித்தி பெறுதல், நல்லோர் சேர்க்கை, மனத் தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். இனி லக்னத்திலிருந்து 10ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அரசு மரியாதை, குதிரை சவாரி, பிரபுத்துவம், புகழ், மரியாதை, அந்தஸ்துள்ள வாழ்வு, உயர் அதிகாரம், சுபிட்ச காலம் அல்லது கெட்ட நேரம், தெய்வ வழிபாடு, அரசாங்க சேவை, விவிசாயம், வியாபாரம், வைத்தியம், தொடைகள், மந்திர உச்சாடனம் செய்தல், வெற்றி, சித்தி பெறுதல், மரியாதைக்கு உரியவராதல், செளகரியம், கீர்த்தி போன்றவற்ரை அறியலாம். இவை அனத்திற்கும் காரகர்கள் சூரியன், புதன், குரு, சனி ஆகியோர் ஆவர். இனி லக்னத்திலிருந்து 11ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அனைத்து லாபம் அல்லது நஷ்டம், கெட்ட எண்ணங்கள், வரவுகள், சார்ந்து நிற்பது, மூத்த சகோதரம், புத்தி கூர்மை, தகப்பன் வழிச் சொத்து, சகல வித வருமானம், ஆசைகள் நிறைவேறுதல், அதிர்ஷ்டம், கலைகளில் திறமை, மூதாதையர் சொத்து கிடைத்தல், களஸ்திர மகிழ்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, குறிக்கோளை அடைதல், இடது காது, நல்ல அல்லது கெட்ட விஷயங்களில் ஆசை, அதி சூக்சுமமான புத்தி, நல்ல காலம் ஆரம்பித்தல், அனைத்திலும் வெற்றி, தாயின் ஆயுள், விவேகம், தேவதைகளை பூஜித்தல் ஆகியவற்றை அறியலாம். பொதுவாக 11ம் பாவம் மூலம் சகல வித லாபம், மூத்த சகோதரம், ஆசைகள் நிறைவேறுதல் முதலியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். இனி 12ம் வீட்டின் காரக பலன்களைப் பற்றி அறியலாம். நித்திரை அல்லது நித்திரை பங்கம், மனத் துயரம், மன மகிழ்ச்சி, எதிர்கால பயம் அல்லது வியாதிகளால் பயம் அல்லது விடுதலை, கடன் அடைத்தல், மாட மாளிகைகள், சொத்துக்கள், இடது கண், பொது ஜன விரோதம், அங்ககீனம், வீரம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், படுக்கை, வேலை நீக்கம், சிறை வாசம், மனக் கொந்தளிப்பு, பொல்லாத்தனம், அற்புதத் தன்மை, எதிர்பாராத பேரிடிகளை சந்தித்தல், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, மரணம், வெளியூர் அல்லது அந்நிய தேச வாசம், மனைவியின் மரணம், துக்கம், கால்கள், இடது கண், நஷ்டம், இறங்கு முகம், விரையம், உளவாளி, கோள் சொல்தல், கடைசி நாட்கள், வறுமை, பாபங்கள், சயன சுகம் அல்லது சுகமின்மை, காவலில் வைக்கப் படுதல், மோட்சம், இராஜ தண்டனை முதலியவற்றை அறியலாம். பொதுவாக 12ம் வீட்டின் மூலம் பண விரையம், கஷ்டங்கள், சிறைவாசம், எதிரி முதலியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் சனி பகவான்.
இது வரை 12 ராசிகளும் நமக்கு என்ன விதமான பலன்களைச் செய்கின்றன என்றும், அந்த பலன்களைச் செய்யும் கிரகங்கள் என்னென்னவென்றும் பார்த்தோம். அதாவது ஒரு பலனை ஒரு ராசி செய்கிறது என்றால் அந்த வீட்டின் பலனை அதில் இடம் பெற்றிருக்கும் கிரகமும் சேர்ந்து செய்யும் என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்த உடன் அந்த மனிதனின் ஜாதகத்தில் இடம் பெறும் கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இடம் பெறுகின்றன என்பதையும் அந்த ராசியின் பலன்கள் என்னென்ன என்பதையும், அந்த ராசிகளில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் எந்தெந்த விதத்தில் நன்மைகள் அல்லது தீமைகளைச் செய்கின்றன என்பதையும் மிகத் துல்லியமாக ஆராய வேண்டும். இனி அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.


புதன், 6 பிப்ரவரி, 2013

ஜோதிடப் பாடம் 7.


சென்ற பாடத்திலும் அதன் முந்திய பாடங்களிலும் 12 ராசிகளைப் பற்றியும், 9 கிரகிங்களைப் பற்றியும் பார்த்தோம். அதோடு பாதக ஸ்தானைங்களைப் பற்றியும் பார்த்தோம். இனி ஒவ்வொரு லக்னமாகப் பார்க்கலாம்.
இப்போது மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இந்த லக்னத்திற்கு 1, 5, 9ம் வீடுகளான திரிகோண ஸ்தானங்களான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகளுக்கு அதிபதிகள் செவ்வாய், சூரியன், குரு என்ற வியாழ பகவான் ஆகியோர். இங்கே எந்த வீடும் பாதக வீடாக இடம் பெறாததால் இவர்கள் மூவரும் பாதகாதிபதிகள் லிஸ்டில் இடம் பெற மாட்டார்கள். எனவே இவர்கள் மூவரும் ஜாதகத்தில் நன்முறையில் இடம் பெற வேண்டும்.
அதே போல் இந்த லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ம் வீடுகளாக இடம் பெறுபவை மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகள். இவற்றின் அதிபதி கிரகங்கள் செவ்வாய், சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள். இவற்றில் சனி பகவான் 10ம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதி ஆகி சுபர் வரிசையில் இடம் பெற்றாலும் மேஷ லக்னம் சர லக்னமாவதால் இந்த லக்னத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானமே பாதக ஸ்தானமாக அமைவதால் சனி பகவான் பாதகராகவே செயல் படுவார்.
ஆக மொத்தத்தில் இந்த மேஷ லக்னத்திற்கு திரிகோண மற்றும் கேந்திர ஸ்தானங்களின் அதிபதி கிரகங்களாக இடம் பெறுபவர்கள் யோகர்கள் ஆவார்கள். கேந்திராதிபதி லிஸ்டில் வரும் சனி பகவான் பாபர் ஆவார். 2ம் வீட்டின் அதிபதி சுபர் அவார். ஆக 2ம் வீட்டு அதிபதியாகவும், 7ம் வீட்டு அதிபதியாகவும் இடம் பெறும் சுக்கிர பகவான் இந்த லக்னக் காரர்களுக்கு சுபராகவும், யோகராகவும் செயல் படுவார். அதே நேரம் 2, 7ம் வீடுகள் மாரக வீடுகளாவதால் இவர் மாரகாதிபதியாகவும் செயல் படுவார். மாரகம் என்றால் மரணம் என்று அர்த்தம். உடனே சுக்கிர திசா காலம் சிறு வயதிலேயே வந்து விட்டால் அவர் சிறு வயதிலேயே அவர் மரணமடைந்து விடுவார் என்று அர்த்தமல்ல. வயதான பிறகு மரணமடையும் தறுவாயில் இவரது அதாவது இந்த சுக்கிர பகவானது ஒத்துழைப்பு இல்லாமல் மரணமடைய முடியாது என்று அர்த்தம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். யோகர்களாகவும், சுபர்களாகவும் செயல் படக் கூடிய இந்த கிரகங்கள் ஜாதகத்தில் கெடக் கூடாது. சுபத்துவம் பெற வேண்டும். பாதகாதிபதியாக வரும் சனி பகவான் சுபத்துவம் பெறக் கூடாது. கெட வேண்டும். கெடுவது என்றால் என்ன? சுபத்துவம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஜாதகத்தில் லக்னம் முதல் இடம் பெறும் 12 வீடுகளிலும் 3, 6, 8, 12ம் வீடுகளை மறைவு ஸ்தானங்கள் என்று சொல்வார்கள். இதில் இடம் பெறும் 6ம் வீடு மாத்திரமே முழுமையான மறைவு ஸ்தானம். மறைவு ஸ்தானம் என்றால் கெட்ட வீடு என்று அர்த்தம்.
வீரம், இளைய சகோதரம், வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது, நோய், இசை, துணைவர், ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, தெளிவு, கனவுகள், உறவினர்கள், அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவை யாவற்றையும் 3ம் வீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக 6ம் வீட்டிற்கு ருண, ரோக ஸ்தானம் என்று பெயர். கடன், வஞ்சனை, காயம், பசி, எதிரி, நோய், தடை, தாமதங்கள், தாய் மாமன், கொடூரச் செயல், அவதூறு, எதிரியின் மகிழ்ச்சி, எதிரியால் நஷ்டம், யுத்தம், மனக் கவலை, வேதனை, அகால போஜனம், உறவினருடன் கருத்து வேறுபாடு, அனைவராலும் வெறுக்கப் படுதல், சோம்பேறித்தனம், உடல் வீக்கம், களைப்பு, சிக்கனம், அடிமை, கடின உழைப்பு, உட்பகை, பங்காளிகளுடன் வழக்காடுதல், ஆயுத பயம், திருடர்களால் பயம், அரசாங்க சிறைத் தண்டனை ஆகியவற்றை இந்த 6ம் வீட்டின் மூலம் அறியலாம்.
அவமானம், தூக்கம், கொலை, ஆயுள், கலகம், கெட்டபெயர், துன்பம், மரணம், விவகாரம், ஆபத்து, நீடித்த நோய், பண விரையம், வீண் பொழுது போக்கு, எதிர்பாராதது நடைபெறுதல், சொம்பேறித்தனம், பாவச் செயல்களைச் செய்தல், அங்ககீனம், கடும் வேதனை ஆகியவற்றை 8ம் வீட்டின் மூலம் அறியலாம்.
நித்திரை அல்லது நித்திரை பங்கம், மனத் துயரம், மன மகிழ்ச்சி, எதிர்கால பயம் அல்லது வியாதிகளால் பயம் அல்லது விடுதலை, கடன் அடைத்தல், மாட மாளிகைகள், சொத்துக்கள், இடது கண், பொது ஜன விரோதம், அங்ககீனம், வீரம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், படுக்கை, வேலை நீக்கம், சிறை வாசம், மனக் கொந்தளிப்பு, பொல்லாத்தனம், அற்புதத் தன்மை, எதிர்பாராத பேரிடிகளை சந்தித்தல், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, மரணம், வெளியூர் அல்லது அந்நிய தேச வாசம், மனைவியின் மரணம், துக்கம், கால்கள், இடது கண், நஷ்டம், இறங்கு முகம், விரையம், உளவாளி, கோள் சொல்தல், கடைசி நாட்கள், வறுமை, பாபங்கள், சயன சுகம் அல்லது சுகமின்மை, காவலில் வைக்கப் படுதல், மோட்சம், இராஜ தண்டனை முதலியவற்றை 12ம் வீட்டின் மூலம் அறியலாம். பொதுவாக 12ம் வீட்டின் மூலம் பண விரையம், கஷ்டங்கள், சிறைவாசம், எதிரி முதலியவற்றை அறியலாம்.
இப்படி இந்த நான்கு வீடுகளும் அதிகமாக கெடு பலன்க்ளைப் பற்றிச் சொல்வதால் இந்த வீடுகளில் பாதகாதிபதியாக வரும் கெட்டவன் கெட்ட வீட்டில் இடம் பெறலாம் என்று சொல்லப் படுகிறது.
1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய வீடுகள் சுப வீடுகள். அதன் அதிபதி கிரகங்கள் சுபர்கள். ஆகையினால் இவர்கள் யாவரும் சுபத்துவம் பெற்று இந்த வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இடம் பெற்றால் நன்மைகளைச் செயவார்கள்.
ஆனால் இதற்கு முன்பு கூறியது போல் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமும், 9ம் வீடான் பாக்கிய ஸ்தானமும், 11ம் வீடான லாப ஸ்தானமும் அந்தந்த லக்னைங்களப் பொறுத்து பாதக ஸ்தானைங்களாகவும், அதன் அதிபதி கிரகங்கள் பாதக அதிபதிகளாகவும் வருவதற்கு வாய்ப்புண்டு என்பதனால் இவர்கள் கெட்ட வீடுகளான 3, 6, 8, 12ம் வீடுகளில் அல்லது அந்த வீட்டிற்குரிய அதிபதியின் நட்சத்திரங்களில் நின்று கெட்டால் நன்மைகளைச் செய்வார்கள் என்று அர்த்தம்.
ஆனாலும் 3, 8, 12ம் வீடுகளை முழுமையான கெட்ட வீடுகளாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் 3ம் வீடு உப ஜெய ஸ்தானமாக இடம் பெறுவதாலும், சகோதரரைப் பற்றிச் சொல்வதாலும், இன்னும் மேலே சொல்லப் பட்ட விஷயங்களைப் பார்த்தால் அதில் சில நல்ல விஷயங்கள் சொல்லப் பட்டிருப்பதாலும், 8ம் வீடு மாங்கல்யம் மற்றும் ஆயுள் பற்றிச் சொல்வதாலும், 12ம் வீடு சுகமான நித்திரைக்கும், நல்ல சாப்பாடிடிற்கும் உரிய வீடாவதாலும் அங்கே இந்த பாதாகதிபதிகள் இடம் பெற்றால் இந்த பலன்கள் பாதிக்கப் படும். ஆகையால்தான் முழுமையான் கெட்ட வீடு என்பது 6ம் வீடு மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே சுப கிரகங்களாக கருதப் படுபவர்கள் யாவரும் இந்த வீடுகளில் இடம் பெறக் கூடாது. அதே போல் பாவ கிரகங்களாகக் கருதப் படுபவர்கள் சுப வீடுகளில் இடம் பெற்றால் அந்த சுப வீடுகள் கெட்டு அந்த வீடுகளில் இடம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசா காலங்கள் வரும் போது கெடு பலன்களிச் செய்வார்கள். இனி அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.
பாடங்களைப் படிப்பவர்கள் தயவு செய்து தங்களது கருத்துக்களைத் தெரியப் படுத்துனால் நல்லது என்று கேட்டுக் கொள்கிறேன்.