புதன், 6 பிப்ரவரி, 2013

ஜோதிடப் பாடம் 7.


சென்ற பாடத்திலும் அதன் முந்திய பாடங்களிலும் 12 ராசிகளைப் பற்றியும், 9 கிரகிங்களைப் பற்றியும் பார்த்தோம். அதோடு பாதக ஸ்தானைங்களைப் பற்றியும் பார்த்தோம். இனி ஒவ்வொரு லக்னமாகப் பார்க்கலாம்.
இப்போது மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இந்த லக்னத்திற்கு 1, 5, 9ம் வீடுகளான திரிகோண ஸ்தானங்களான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகளுக்கு அதிபதிகள் செவ்வாய், சூரியன், குரு என்ற வியாழ பகவான் ஆகியோர். இங்கே எந்த வீடும் பாதக வீடாக இடம் பெறாததால் இவர்கள் மூவரும் பாதகாதிபதிகள் லிஸ்டில் இடம் பெற மாட்டார்கள். எனவே இவர்கள் மூவரும் ஜாதகத்தில் நன்முறையில் இடம் பெற வேண்டும்.
அதே போல் இந்த லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ம் வீடுகளாக இடம் பெறுபவை மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகள். இவற்றின் அதிபதி கிரகங்கள் செவ்வாய், சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள். இவற்றில் சனி பகவான் 10ம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதி ஆகி சுபர் வரிசையில் இடம் பெற்றாலும் மேஷ லக்னம் சர லக்னமாவதால் இந்த லக்னத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானமே பாதக ஸ்தானமாக அமைவதால் சனி பகவான் பாதகராகவே செயல் படுவார்.
ஆக மொத்தத்தில் இந்த மேஷ லக்னத்திற்கு திரிகோண மற்றும் கேந்திர ஸ்தானங்களின் அதிபதி கிரகங்களாக இடம் பெறுபவர்கள் யோகர்கள் ஆவார்கள். கேந்திராதிபதி லிஸ்டில் வரும் சனி பகவான் பாபர் ஆவார். 2ம் வீட்டின் அதிபதி சுபர் அவார். ஆக 2ம் வீட்டு அதிபதியாகவும், 7ம் வீட்டு அதிபதியாகவும் இடம் பெறும் சுக்கிர பகவான் இந்த லக்னக் காரர்களுக்கு சுபராகவும், யோகராகவும் செயல் படுவார். அதே நேரம் 2, 7ம் வீடுகள் மாரக வீடுகளாவதால் இவர் மாரகாதிபதியாகவும் செயல் படுவார். மாரகம் என்றால் மரணம் என்று அர்த்தம். உடனே சுக்கிர திசா காலம் சிறு வயதிலேயே வந்து விட்டால் அவர் சிறு வயதிலேயே அவர் மரணமடைந்து விடுவார் என்று அர்த்தமல்ல. வயதான பிறகு மரணமடையும் தறுவாயில் இவரது அதாவது இந்த சுக்கிர பகவானது ஒத்துழைப்பு இல்லாமல் மரணமடைய முடியாது என்று அர்த்தம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். யோகர்களாகவும், சுபர்களாகவும் செயல் படக் கூடிய இந்த கிரகங்கள் ஜாதகத்தில் கெடக் கூடாது. சுபத்துவம் பெற வேண்டும். பாதகாதிபதியாக வரும் சனி பகவான் சுபத்துவம் பெறக் கூடாது. கெட வேண்டும். கெடுவது என்றால் என்ன? சுபத்துவம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஜாதகத்தில் லக்னம் முதல் இடம் பெறும் 12 வீடுகளிலும் 3, 6, 8, 12ம் வீடுகளை மறைவு ஸ்தானங்கள் என்று சொல்வார்கள். இதில் இடம் பெறும் 6ம் வீடு மாத்திரமே முழுமையான மறைவு ஸ்தானம். மறைவு ஸ்தானம் என்றால் கெட்ட வீடு என்று அர்த்தம்.
வீரம், இளைய சகோதரம், வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது, நோய், இசை, துணைவர், ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, தெளிவு, கனவுகள், உறவினர்கள், அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவை யாவற்றையும் 3ம் வீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக 6ம் வீட்டிற்கு ருண, ரோக ஸ்தானம் என்று பெயர். கடன், வஞ்சனை, காயம், பசி, எதிரி, நோய், தடை, தாமதங்கள், தாய் மாமன், கொடூரச் செயல், அவதூறு, எதிரியின் மகிழ்ச்சி, எதிரியால் நஷ்டம், யுத்தம், மனக் கவலை, வேதனை, அகால போஜனம், உறவினருடன் கருத்து வேறுபாடு, அனைவராலும் வெறுக்கப் படுதல், சோம்பேறித்தனம், உடல் வீக்கம், களைப்பு, சிக்கனம், அடிமை, கடின உழைப்பு, உட்பகை, பங்காளிகளுடன் வழக்காடுதல், ஆயுத பயம், திருடர்களால் பயம், அரசாங்க சிறைத் தண்டனை ஆகியவற்றை இந்த 6ம் வீட்டின் மூலம் அறியலாம்.
அவமானம், தூக்கம், கொலை, ஆயுள், கலகம், கெட்டபெயர், துன்பம், மரணம், விவகாரம், ஆபத்து, நீடித்த நோய், பண விரையம், வீண் பொழுது போக்கு, எதிர்பாராதது நடைபெறுதல், சொம்பேறித்தனம், பாவச் செயல்களைச் செய்தல், அங்ககீனம், கடும் வேதனை ஆகியவற்றை 8ம் வீட்டின் மூலம் அறியலாம்.
நித்திரை அல்லது நித்திரை பங்கம், மனத் துயரம், மன மகிழ்ச்சி, எதிர்கால பயம் அல்லது வியாதிகளால் பயம் அல்லது விடுதலை, கடன் அடைத்தல், மாட மாளிகைகள், சொத்துக்கள், இடது கண், பொது ஜன விரோதம், அங்ககீனம், வீரம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், படுக்கை, வேலை நீக்கம், சிறை வாசம், மனக் கொந்தளிப்பு, பொல்லாத்தனம், அற்புதத் தன்மை, எதிர்பாராத பேரிடிகளை சந்தித்தல், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, மரணம், வெளியூர் அல்லது அந்நிய தேச வாசம், மனைவியின் மரணம், துக்கம், கால்கள், இடது கண், நஷ்டம், இறங்கு முகம், விரையம், உளவாளி, கோள் சொல்தல், கடைசி நாட்கள், வறுமை, பாபங்கள், சயன சுகம் அல்லது சுகமின்மை, காவலில் வைக்கப் படுதல், மோட்சம், இராஜ தண்டனை முதலியவற்றை 12ம் வீட்டின் மூலம் அறியலாம். பொதுவாக 12ம் வீட்டின் மூலம் பண விரையம், கஷ்டங்கள், சிறைவாசம், எதிரி முதலியவற்றை அறியலாம்.
இப்படி இந்த நான்கு வீடுகளும் அதிகமாக கெடு பலன்க்ளைப் பற்றிச் சொல்வதால் இந்த வீடுகளில் பாதகாதிபதியாக வரும் கெட்டவன் கெட்ட வீட்டில் இடம் பெறலாம் என்று சொல்லப் படுகிறது.
1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய வீடுகள் சுப வீடுகள். அதன் அதிபதி கிரகங்கள் சுபர்கள். ஆகையினால் இவர்கள் யாவரும் சுபத்துவம் பெற்று இந்த வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இடம் பெற்றால் நன்மைகளைச் செயவார்கள்.
ஆனால் இதற்கு முன்பு கூறியது போல் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமும், 9ம் வீடான் பாக்கிய ஸ்தானமும், 11ம் வீடான லாப ஸ்தானமும் அந்தந்த லக்னைங்களப் பொறுத்து பாதக ஸ்தானைங்களாகவும், அதன் அதிபதி கிரகங்கள் பாதக அதிபதிகளாகவும் வருவதற்கு வாய்ப்புண்டு என்பதனால் இவர்கள் கெட்ட வீடுகளான 3, 6, 8, 12ம் வீடுகளில் அல்லது அந்த வீட்டிற்குரிய அதிபதியின் நட்சத்திரங்களில் நின்று கெட்டால் நன்மைகளைச் செய்வார்கள் என்று அர்த்தம்.
ஆனாலும் 3, 8, 12ம் வீடுகளை முழுமையான கெட்ட வீடுகளாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் 3ம் வீடு உப ஜெய ஸ்தானமாக இடம் பெறுவதாலும், சகோதரரைப் பற்றிச் சொல்வதாலும், இன்னும் மேலே சொல்லப் பட்ட விஷயங்களைப் பார்த்தால் அதில் சில நல்ல விஷயங்கள் சொல்லப் பட்டிருப்பதாலும், 8ம் வீடு மாங்கல்யம் மற்றும் ஆயுள் பற்றிச் சொல்வதாலும், 12ம் வீடு சுகமான நித்திரைக்கும், நல்ல சாப்பாடிடிற்கும் உரிய வீடாவதாலும் அங்கே இந்த பாதாகதிபதிகள் இடம் பெற்றால் இந்த பலன்கள் பாதிக்கப் படும். ஆகையால்தான் முழுமையான் கெட்ட வீடு என்பது 6ம் வீடு மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே சுப கிரகங்களாக கருதப் படுபவர்கள் யாவரும் இந்த வீடுகளில் இடம் பெறக் கூடாது. அதே போல் பாவ கிரகங்களாகக் கருதப் படுபவர்கள் சுப வீடுகளில் இடம் பெற்றால் அந்த சுப வீடுகள் கெட்டு அந்த வீடுகளில் இடம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசா காலங்கள் வரும் போது கெடு பலன்களிச் செய்வார்கள். இனி அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.
பாடங்களைப் படிப்பவர்கள் தயவு செய்து தங்களது கருத்துக்களைத் தெரியப் படுத்துனால் நல்லது என்று கேட்டுக் கொள்கிறேன்.