செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஜோதிட சூக்சுமங்கள் Part - 2.

சென்ற இடுகையில் மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டோம். இந்த மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு கும்ப ராசி. இதன் அதிபதி கிரகம் சனி பகவான். இந்த சனி பகவான் இந்த மேஷ லக்னக் காரர்களுக்குப் பாவங்களைச் செய்பவன். அதாவது கெடு பலன்களைச் செய்பவன். இப்படி கெடு பலன்களைச் செய்யும் இந்த சனி பகவான் சுப வீடுகளான லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளில் அமர்ந்தால் அந்த வீட்டின் காரக பலன்கள் கெடும்.

2ம் வீட்டில் அமர்ந்தால் தன வருவாய், குடும்பம் பாதிக்கும்.  இப்படி 2ம் வீட்டின் காரக பலன்கள் கெடும். 4ல் அமர்ந்தால் சொத்துக்களை இழக்க வைக்கும். தாயின் நிலை பாதிக்கப் படும். அல்லது தாயின் ஆதரவு கிடைக்காது என்ற வகையில் 4ம் வீட்டின் காரக பலன்கள் கெடும். 5ம் வீட்டில் அமர்ந்தால் புத்திரன் பாதிக்கப் படுவான். மற்றும் 5ம் வீட்டுக்கு என்னென்ன காரக பலன்கள் உண்டோ அவை யாவும் கெடும்.  7ல் அமர்ந்தால் சில நேரங்களில் திருமணம் என்ற ஒரு சுப நிகழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போகும். திருமணம் என்று ஒன்று நடந்தால் பிரியக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். 9ம் வீட்டில் அமர்ந்தால் அனுபவிக்கக் கூடிய பாக்கியங்கள் கெடும். தந்தையின் நிலை கெடும். அல்லது தந்தையால் உபயோகம் இருக்காது. 10ம் வீட்டில் அமர்ந்தால் தொழில் பாதிக்கும். உத்தியோகம் கிடைக்காது.

இப்படி மேற்கூறிய வீடுகளில் மேற்கூறிய வீடுகளின் அதிபதி கிரகங்களின் நட்சத்திரங்களில் நின்று நவாமசக வீட்டில் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்ற வீடுகளில் இடம் பெற்று நின்றால் இந்த பாதகாதிபதியான சனி சுப பலம் பெற்று கெடு பலன்களை அதிகமாகத் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் செய்து மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்க வைத்து அனைத்து செல்வங்களை யும் இழக்கும்படிச் செய்து விடுவான்.

அதே நேரம் இந்த பாதகாதிபதியான சனி பகவான் 6, 8, 12ம் வீடுகளில் நின்றால்  8, 12ம் வீட்டு காரகங்களைக் கெடுத்து  ஆயுளையோ, மாங்கல்ய பலத்தையோ கெடுத்து விடுவான். அவமானங்களைச் சந்திக்க வைப்பான். 6ம் வீட்டில் நின்றால் மட்டுமே முழுமையான சுப பலன்களைச் செய்வான். அதாவது 6ம் வீட்டுக்குரிய காரக பலன்களைக் கெடுத்து விடுவதால் 6ம் வீடு செய்யும் கெடு பலன்களிலிருந்து காப்பாற்றி விடுவான்.

சென்ற பாடத்தில் 10ம் வீட்டின் அதிபதியாகிய சனி பகவானும், 9ம் வீட்டின் அதிபதியாகிய குரு பகவானும் பரிவர்த்தனை பெற்று தர்ம, கர்மாதிபதி யோகத்தை எப்படிச் செய்வார்கள் என்று பார்க்கும் விஷயத்தில் குரு பகவானின் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் என்ன என்று பார்த்தோம்.

சனி பகவான் மேஷ லக்னத்திற்கு 9ம் வீடாகிய தனுசு ராசியில் இடம் பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. 

சனி பகவான் மூலம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் தனுசு ராசியில் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் நீச நிலை பெற வேண்டும்.  மூல நட்சத்திரம் 2ம் பாதத்தில் தனுசு ராசியில் நின்றால் நவாம்சக விட்டில் ரிஷப ராசியில் இடம் பெற வேண்டும். மூல நட்சத்திரம் 3ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் மிதுன ராசியில் இடம் பெற வேண்டும். மூல நட்சத்திரம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கடக ராசியில் இடம் பெறவேண்டும்.

சனி பகவான் மேஷ ராசிக்கு பாதகாதிபதி என்பதால் அவர் 10ம் வீடாகிய கர்ம வீட்டிற்கும் அதிபதியாக இருந்து 9ம் வீட்டிற்குரிய குரு பகவானுடன் தொடர்பு கொண்டு பரிவர்த்தனை பெற்றால் கூட பாக்கிய ஸ்தானத்தில் இவர் அமர்ந்து தனது வீடான 11ம் வீடான பாதக வீட்டைப் பார்வை இடும் போது பாக்கிய ஸ்தானத்தின் சுப பலன்களைக் கெடுத்து பாதக பலன்களையே செய்வார்.

ஆனாலும் இதில் இன்னும் சூக்சும விஷயங்கள் இருக்கின்றன. 

அதாவது சனி பகவான் மாத்திரம் இன்றி எந்த கிரகமாக இருந்தாலும் சரி அந்த கிரகம் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் பட்சத்தில் அதாவது இரு வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெறும் ஒரு கிரகத்திற்கு ஏதேனும் ஒரு வீடு பாதக ஸ்தானமாக வரும் பட்சத்தில் அந்த கிரகம் தனது திசா காலத்தில் பாதக பலன்களையே செய்யும்.

ஆகையால் அந்த கிரகம் நவாம்சக வீட்டில் கெட்டால்தான் அந்த கிரகத்திற்கு பாதக வீடு போக இன்னொரு வீடு சுப வீடாக இருந்தால் கூட அந்த வீடு சுப பலன்களைச் செய்ய வைக்க அந்த கிரகத்திற்கு அனுமதி கொடுக்கும்.

மேலே கூறிய விஷயத்தை மிக நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனி பகவான் மேஷ லக்னத்திற்கு 10, 11 ஆகிய வீடுகளுக்கு அதிபதியாகி 9ம் வீட்டில் இடம் பெற்று இருந்தாரேயானால் அவரது பார்வை 11ம் வீட்டில் பதியும் போது பாதக பலன்களைச் செய்வாரா? அல்லது 11ம் வீடு லாப வீடாகையால் லாப கரமான விஷயங்களைத் தனது திசா காலத்தில் செய்ய வைப்பாரா? என்று ஆராய்ந்தோமேயானால் அவர் நவாம்சக வீட்டில் கெட்டிருந்தால் மட்டுமே சுப பலன்களைத் தனது திசா காலத்தில் அள்ளி வழங்குவார். அதாவது அவர் இடம் பெற்றிருக்கும் 9ம் வீடு, அவர் அதிபதியாக இருக்கும் 10, 11 ஆகிய வீடுகளின் பலன்கள் இவை யாவும் சுபத்துவம் பெறும். ஆக தர்ம. கர்ம வீடுகளான 9, 10ம் வீடுகள் மட்டுமின்றி 11ம் வீடு லாபத்தை அள்ளி வழங்கும்.

ஆக மூல நட்சத்திரத்தில் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் இடம் பெற்று நீச நிலை பெறுவதாலும், மூலம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கடக ராசியில் இடம் பெற்று பகை நிலை பெறுவதாலும் இந்த சனி பகவான் கெட்டு விடுவதால் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் நன்மைகளை அள்ளி வழங்குவார்.

மூலம் 2, 3 பாதங்களில் நின்றால் நவாம்சக வீட்டில் ரிஷப ராசியிலும், மிதுன ராசியிலும் நட்புறவு பெறுவதால் சுப பலன் பெற்று கெடு பலன்களைத் தனது திசா புக்திக் காலங்களில் அள்ளி வழங்குவார்.   

அடுத்து பூராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் சிம்ம வீட்டில் இடம் பெற்று பகை நிலை பெறுவதால் சுப பலன்களைத் தனது திசா, புக்திக்  காலங்களில் செய்வார். பூராடம் 2, 3 பாதங்களில் நின்றால் நவாம்சக வீட்டில்  கன்னி ராசியில் இடம் பெற்று நட்புறவு பெறுவதாலும், துலா ராசியில் இடம் பெற்று உச்ச நிலை பெறுவதாலும் சுபத்துவம் பெற்ற இவர் தனது திசா, புக்திக் காலங்களில் கெடு பலன்களை அள்ளி வழங்குவார்.

உத்திராட நட்சத்திரம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டிலும் தனுசு ராசியிலேயே இடம் பெற்று வர்கோத்தம நிலை பெற்று சுபத்துவம் பெறுவதால் தனது திசா, புக்திக் காலங்களில் கெடு பலன்களை அள்ளி வழங்குவார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தர்ம, கர்மாதிபதி யோகம் என்பது எந்த வகையில் செயல்படுகிறது? என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

இனி அடுத்த பாடத்தில் இதே தர்ம, கர்மாதிபதி யோகம் என்பது இந்த 9, 10ம் வீடுகளுக்குரியவர்கள் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக இல்லாத பட்சத்தில் எப்படி சுப அல்லது அசுப பலன்களைச் செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.