செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ஜோதிட சூக்சுமங்கள் Part III

சென்ற பாடத்தில் மேஷ லக்னத்திற்கு 9, 10ம்  வீடுகளுக்குரிய குரு பகவானும், சனி பகவானும் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியான பலன்களைச் செய்வான் என்று பார்த்தோம்.  இனி மேஷ லக்னத்திற்கு சனி பாதக அதிபதியாவதால் எப்படி இருந்தால் அதாவது மேஷ லக்னத்திற்கு எந்த மாதிரியாக இடம் பெற்றால் நன்மைகளும், தீமைகளும் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷ லக்னத்திற்கு 10, 11ம் வீடுகளுக்குரிய சனி பகவான் 11ம் வீட்டில் ஆட்சி செய்யக் கூடாது. ஆனால் 10ல் ஆட்சி செய்யலாம்.  இங்கே பாதகாதிபதி ஆட்சி செய்யக் கூடாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறீர்களே! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது பாதக ஸ்தானத்திற்கு சனி பகவான் மறைந்து விடுவதால் மட்டுமே இந்த பதில். அதாவது பாதக ஸ்தானத்திற்கு என்று மட்டுமல்ல, கெடு பலன்களைச் செய்யும் ஒரு கிரகம் தனது வீட்டுக்கு மறைந்தால் அவனால் கெடு பலன்களைச் செய்ய முடியாது. இதுதான் உண்மை. எனவே இங்கு சனி பகவான் நல்லவராகிறார். ஆகையால் இவர் நவாம்சக வீட்டில் சுபத்துவம் பெற வேண்டும். அதாவது நட்பு நிலை அல்லது ஆட்சி நிலை பெற வேண்டும்.

மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு கும்ப ராசி. சனி பகவான் அதற்கு மறைவு ஸ்தானமான மகர ராசியில் இடம் பெற்றிருக்கிறார். மகர ராசியில் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்,  திருஓணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் ஆகிய நட்சத்திர பாதங்கள் இடம் பெறுகின்றன. 

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் நவாம்சக வீட்டில் உத்திராடம் 2ம் பாதம் அதே மகர ராசியிலும், உத்திராடம் 3ம் பாதம் கும்ப ராசியிலும், உத்திராடம் 4ம் பாதம் மீன ராசியிலும் இடம் பெறும். இந்த மூன்று வீடுகளில் மகர, கும்ப வீடுகள் ஆட்சி வீடுகளாகவும், மீன வீடு நட்பு வீடாகவும் இடம் பெறுகிறது. இப்படி சனி பகவான் இடம் பெற்றால் தனது திசா, புக்திக்  காலங்களில் சுப பலன்களையே செய்வார். 

திருஓணம் 1, 4ம் பாதங்களில் நின்றால் 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இடம் பெற்று நீச நிலை பெற்று கெடு பலன்களையும்,  4ம் பாதத்தில் நின்றால் கடக ராசியில் பகை நிலை பெற்று கெடு பலன்களையும் தனது திசா புக்திக் காலங்களில் செய்வார்.

திருஓணம் 2, 3ம் பாதங்களில் நின்றால் 2ம் பாதத்தில் நின்று ரிஷப ராசியில் நட்பு நிலை பெற்று சுப பலனையும், 3ம் பாதத்தில் நின்றால் மிதுன ராசியில் இடம் பெற்று நட்பு நிலை பெற்று சுப பலன்களையும் தனது திசா புக்திக் காலங்களில் செய்வார்.  

அவிட்டம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் சிம்ம ராசியில் இடம் பெற்று பகை நிலை பெற்று தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களையும், அவிட்டம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கன்னி ராசியில் இடம் பெற்று நட்புறவு பெற்று தனது திசா, புக்திக் காலங்களில் சுப பலன்களையும் செய்வார்.

இப்படி சனி மேஷ ராசிக்கு சனி பாதகாதிபதியானாலும் கூட  தனது வீடான பாதக வீட்டிற்கு மறைந்து இருந்தால் மேலே கூறிய படியே பலன்கள் நடைபெறும். மாறாக 11ம் வீட்டில் ஆட்சி பெற்றாலும் சரி அல்லது பாக்கிய ஸ்தானமான 9ம் வீடான தனுசு ராசியில் நின்று பாதக ஸ்தானத்தைப் பார்த்தாலும் சரி நவாம்சக வீட்டில் இவன் சுபத்துவமும் பெறக் கூடாது. மாறாக பகை நிலையோ அல்லது நீச நிலையோ பெற வேண்டும்.

ஒரு வேளை மேஷ லக்னத்திலேயே ராசிச்  சக்கரத்தில் சனி பகவான் ராசிச் சக்கரத்தில் நீச நிலை பெற்று விட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

பாதகாதிபதி நீசம் பெறுவது நன்மையே. அதாவது பாதக பலன்களைச் செய்யும் சனி பகவான் நீச நிலை பெற்று கெட்டு விட்டால் அவரால் அசுப பலன்களைச் செய்ய முடியாமல் பலன்கள் யாவும் சுப பலன்களாக மாறி விடும். அப்போது சனி இந்த லக்னக்காரருக்கு சுபராகி, யோகராகி அனைத்து யோகங்களையும் தனது திசா புக்திக் காலத்தில் செய்துவிடுவார்.  ஆனால் இவர் இப்போது நவாம்சக ராசியில் சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும். அதாவது நட்புறவு பெற வேண்டும். ஆனால் உச்சம் பெறக் கூடாது. உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் என்ற பெயரில் அவ யோகத்தைச் செய்து விடுவார்,  பகை பெற்றால் கண்டிப்பாக இவரால் சுப பலன்களைச் செய்ய முடியாது.

இப்போது பாதகாதிபதி ராசியில் உச்சம் பெற்றால் என்ன மாதிரி பலன் என்று பார்ப்போம்.  மேஷ லக்னத்திற்கு 7ம் வீடான துலா ராசியில் உச்சம் பெற்றால் கெடு பலன்களையே அந்த ஜாதகர் அனுபவிக்க நேரும்.

துலா ராசியில் சித்திரை 3, 4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் இடம் பெறுகின்றன. சித்திரை 3ல் சனி பகவான் நின்றால் வர்கோத்தமம் என்ற பெயரில் அசுப பலன்களை இரட்டிப்பாக்கி விடுவார்.  சித்திரை 4ல் நின்றால் நவாம்சக வீட்டில் விருச்சிகத்தில் பகை பெற்று சுப பலன்களைச் செய்வார். பாதகாதிபதியாக வரும் ஒரு கிரகம் உச்சம் பெற்று கெடு பலன்களச் செய்ய வேண்டும் என்று இருக்கும் போது நவாம்சக வீட்டில் பகை நிலை பெற்றால் அவனால் கெடு பலன்களைச் செய்ய முடியாது. மாறாக சுப பலன்களே ஏற்படும்.

ஸ்வாதி 1, 4ம் பாதங்களில் நின்றால் ந்வாம்சக வீட்டில் தனுசு ராசியிலும், மீன ராசியிலும் இடம் பெற்று நட்புறவு பெற்று கெடு பலன்களைச் செய்வார். ஸ்வாதி 2, 3ம் பாதங்களில் நின்றால் நவாம்சக வீட்டில் மகர, கும்ப ராசிகளில் இடம் பெற்று ஆட்சி பெற்று  கெடு பலன்களை மிக அதிகமாகச் செய்வார்.

விசாகம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக ராசியில் மேஷ ராசியில் நீச நிலை பெற்று சுப ராகி அதாவது ராசியில் உச்சம் பெற்று கெடு பலன்களைச் செய்ய வேண்டும் என்று இருக்கும் வேளையில் நவாம்சக ராசியில் நீச நிலை பெறுவதால் அந்த கெடு பலன்களைச் செய்ய முடியாமல் சுப பலன்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

விசாகம் 2, 3 பாதங்களில் நின்றால் நவாம்சக வீட்டில் ரிஷப ராசியிலும், மிதுன ராசியிலும் இடம் பெற்று நட்புறவு பெற்று முழு அசுபராகி கெடு பலன்களை அள்ளி வழங்குவார்.  

இப்படித்தான் பாதகாதிபதியாக வரும் ஒரு கிரகம் ராசியிலும் நவாம்சக வீட்டிலும் இடம் பெறும் விதத்தைப் பொறுத்துப் பலன்களை ஆராய வேண்டும்.


2 கருத்துகள்: