செவ்வாய், 29 அக்டோபர், 2013

ஜோதிடப் பாடம் 8


சென்ற பாடத்தில் மேஷ லக்னம் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய். மற்றும் 8ம் வீட்டிற்குரியவன் செவ்வாய். 8ம் வீடு விருச்சிக ராசி. 2ம் வீடு மற்றும் 7ம் வீட்டிற்குரியவன் சுக்கிரன். 2ம் வீடு ரிஷப ராசி. 7ம் வீடு துலாம் ராசி. 3, 6ம் வீட்டிற்குரியவன் புதன். 3ம் வீடு மிதுன ராசி. 6ம் வீடு க்ன்னி ராசி. 4ம் வீட்டிற்குரியவன் சந்திரன். 4ம் வீடு கடக ராசி. 5ம் வீட்டிற்குரியவன் சூரியன். 5ம் வீடு சிம்ம ராசி. 9, 12ம் வீட்டிற்குரியவன் குரு என்ற வியாழ பகவான். 9ம் வீடு தனுசு ராசி. 12ம் வீடு மீன ராசி. 10, 11ம் வீடுகளுக்குரியவன் சனி பகவான். 10ம் வீடு மகர ராசி. 11ம் வீடு கும்ப ராசி.
பொதுவாக 12 வீடுகளுக்கும் அதாவது 12 ராசிகளுக்கும் காரக பலன் என்று உண்டு. அதே போல் 9 கிரகங்களுக்கும் காரக பலன் என்று உண்டு.
காரக பலன் என்றால் 12 ராசிகளும், 9 கிரகங்களும் என்னென்ன விஷயங்கள் பற்றிச் சொல்கிறது என்று அர்த்தம்.
லக்னம் என்ற முதல் வீடு தலை, உடல், உயிர், அவயவங்கள், சுபாவம், ஆயுள், சந்தோஷம், அறிவு, பிரபலம், கெளரவம், பலம், ஆரோக்கியம், செயல் திறன், சுய மரியாதை, கர்வம், அமைதி, பாண்டித்யம், வருத்தம், அதிருப்தி, இழுக்கு, கண்ணியம்,வயது,ரூபம் (தோற்றம்), நிறம், வடுக்கள், சுகம், துக்கம், சாகஸம் இவை பற்றிச் சொல்லும். இதைத்தான் காரக பலன்கள் என்கிறோம். இவை யாவற்றிற்கும் காரகர் சூரிய பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 2ம் வீடு பெரும் செல்வம், பருவம், நெற்றி, மனைவி, முகம், வாக்கு, வலது கண், படிப்பு, உணவு, தன வருவாய், குடும்பம், சொல்வன்மை, உண்மை, நேர்மை, நாக்கு, மூக்கு, பாண்டித்யம், வித்தை, நண்பர்கள், குடும்ப உறவு, திடபுத்தி, வியாபாரத்தில் வருவாய், செல்வம் சேமிப்பு, பரோபகார சிந்தனை, திட மனது, பணிவு, சாஸ்திரங்களில் நம்பிக்கை, சிக்கனம், பொய், கபடு, கலை இவற்றைப் பற்றிச் சொல்லும். இவையே இந்த 2ம் வீட்டின் காரக பலன்கள். இவற்றிற்கு காரகர் குரு என்ற வியாழ பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 3ம் வீடு வீரம், இளைய சகோதரம், வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது நோய், இசை, துணைவர், ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, கனவுகள், தெளிவு, உறவினர்கள், அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவற்றைப் பற்றிச் சொல்லும். இவையே இந்த வீட்டின் காரக பலன்கள். இவற்றிற்கு காரகர் செவ்வாய் பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 4ம் வீடு தாய், கல்வி, வாகனங்கள், சொத்துக்கள், சுகம், வீடு, நிலம், தோட்டம், கிணறு, நீர் நிலை, பால், பவளம், நன்னடத்தை, ஒழுக்கம் கெடுதல், வேத சாஸ்திரங்களை விருத்தி செய்தல், உயர் கல்விப் படிப்பு, உறவினர்கள், நண்பர்கள், கலை, இலக்கியம், மகிழ்ச்சியான் வாழ்க்கை, ஆடை, ஆபரணம், கால் நடைகள், செல்வம், தந்தையின் ஆயுள், சேமிப்பு, நல்லறிவு, சுகக் கேடுகள், மனைவியுடன் அந்தரங்க வாழ்க்கை, அல்லது மனைவி அல்லாதவளுடன் திருட்டு சுகம் அனுபவித்தல் இவற்றைப் பற்றிச் சொல்லும். இவையே 4ம் வீட்டு காரக பலன்கள். இவற்றிற்கு காரகர் சந்திர பகவான்.
லக்னத்திலிருந்து எண்ணி வரும் 5ம் வீடு பூர்வ புண்ணியம், புத்திரம், நன்னடத்தை, புத்தி கூர்மை, விவேகம், மந்திரம் கற்றல், மந்திரப் பிரயோகம், உபாசனை, பாவ புண்ணியம் பார்த்தல், பாண்டித்யம், ஆழ்ந்த சிந்தனை, பரம்பரைப் பதவி, உல்லாசம், சந்தோஷம், இலக்கியத்தில் புலமை, நீண்ட நூல்களை எழுதுதல், தந்தை வழி வம்ச விருத்தி, சாஸ்திர விருத்தி, அன்பு, ஹ்ருதயம், மார்பு, பிரபுத்துவம், தந்தை, தாய் மாமன், மந்திர சாஸ்திரம், முற்பிறப்பில் செய்த நற்செயல்கள், புத்திர, புத்திரிகள், புலவர்களால் பாராட்டிப் பாடப் பெறுதல், தவம், முன் ஜென்மம், தனம், புத்திர வர்க்கம் ஆகியவை பற்றிச் சொல்கிறது. இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான்.
இனி லக்னத்திலிருந்து 6ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். கடன், வஞ்சனை, காயம், பசி, எதிரி, நோய், தடை, தாமதங்கள், தாய் மாமன், கொடூரச் செயல், அவதூறு, எதிரியின் மகிழ்ச்சி, எதிரியால் நஷ்டம், யுத்தம், மனக் கவலை, வேதனை, அகால போஜனம், உறவினருடன் கருத்து வேறுபாடு, அனைவராலும் வெறுக்கப் படுதல், சோம்பேறித்தனம், உடல் வீக்கம், களைப்பு, சிக்கனம், அடிமை, கடின உழைப்பு, உட்பகை, பங்காளிகளுடன் வழக்காடுதல், ஆயுத பயம், திருடர்களால் பயம், அரசாங்க சிறைத் தண்டனை ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான்.
இனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். களஸ்திரம், திருமணம், காதல், அனைவரும் வசியமாதல், வியாபாரம், வாடிக்கையாளர்கள், பகைவர்களின் அழிவு, நீண்ட பிரயாணம், அன்பளிப்பு, பாலுறுப்புக்கள், இரு மனைவிகள், மரணம், வெற்றி, தத்துப் புத்திரன், பணப் பாதுகாப்பு, பாலுறவு, வாக்குவாதம், கற்பு நிலை, திருட்டு, அதிகாரம் குறைதல், சுகபோகம், சுகமான திருமணம், திருமணம் நடைபெறும் திசை, சிற்றின்பம் ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிர பகவான்.
இனி லக்னத்திலிருந்து 8ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அவமானம், தூக்கம், கொலை, ஆயுள், கலகம், கெட்டபெயர், துன்பம், மரணம், விவகாரம், ஆபத்து, நீடித்த நோய், பண விரையம், வீண் பொழுது போக்கு, எதிர்பாராதது நடைபெறுதல், சொம்பேறித்தனம், பாவச் செயல்களைச் செய்தல், அங்ககீனம், கடும் வேதனை ஆகியவற்றை அறியலாம். பொதுவாக 8ம் பாவம் ஆயுளைப் பற்றிச் சொல்லும். இவை அனைத்திற்கும் காரகர் சனி பகவான். இனி லக்னத்திலிருந்து 9ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். இந்த வீட்டிற்கு தர்ம ஸ்தானம் என்ற பெயரும் உண்டு. தர்மம், நல்லொழுக்கம், புண்னிய தீர்த்தங்களை நாடுதல், தவம், மற்றவரை அல்லது பெரியவரை மதித்தல், நல்ல தெளிவான புத்தி, பக்தி, முயற்சி பலிதம். அபூர்வ விஷயங்கள், செல்வச் செழிப்பு, பெருந்தன்மை, மதிப்பு, மரியாதை, சத்சங்கம், மகிழ்ச்சி, தகப்பனார் வழிச் சொத்து, குதிரைகள், யானைகள், கறவை மாடுகள், அந்தணர்க்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளுதல், யாகங்களை மேற்கொள்ளுதல், பணப் புழக்கம், பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளுதல், கோவில் திருப்பணி, மந்திர உபதேசம், அஷ்டமாசித்தி பெறுதல், நல்லோர் சேர்க்கை, மனத் தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். இனி லக்னத்திலிருந்து 10ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அரசு மரியாதை, குதிரை சவாரி, பிரபுத்துவம், புகழ், மரியாதை, அந்தஸ்துள்ள வாழ்வு, உயர் அதிகாரம், சுபிட்ச காலம் அல்லது கெட்ட நேரம், தெய்வ வழிபாடு, அரசாங்க சேவை, விவிசாயம், வியாபாரம், வைத்தியம், தொடைகள், மந்திர உச்சாடனம் செய்தல், வெற்றி, சித்தி பெறுதல், மரியாதைக்கு உரியவராதல், செளகரியம், கீர்த்தி போன்றவற்ரை அறியலாம். இவை அனத்திற்கும் காரகர்கள் சூரியன், புதன், குரு, சனி ஆகியோர் ஆவர். இனி லக்னத்திலிருந்து 11ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அனைத்து லாபம் அல்லது நஷ்டம், கெட்ட எண்ணங்கள், வரவுகள், சார்ந்து நிற்பது, மூத்த சகோதரம், புத்தி கூர்மை, தகப்பன் வழிச் சொத்து, சகல வித வருமானம், ஆசைகள் நிறைவேறுதல், அதிர்ஷ்டம், கலைகளில் திறமை, மூதாதையர் சொத்து கிடைத்தல், களஸ்திர மகிழ்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, குறிக்கோளை அடைதல், இடது காது, நல்ல அல்லது கெட்ட விஷயங்களில் ஆசை, அதி சூக்சுமமான புத்தி, நல்ல காலம் ஆரம்பித்தல், அனைத்திலும் வெற்றி, தாயின் ஆயுள், விவேகம், தேவதைகளை பூஜித்தல் ஆகியவற்றை அறியலாம். பொதுவாக 11ம் பாவம் மூலம் சகல வித லாபம், மூத்த சகோதரம், ஆசைகள் நிறைவேறுதல் முதலியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். இனி 12ம் வீட்டின் காரக பலன்களைப் பற்றி அறியலாம். நித்திரை அல்லது நித்திரை பங்கம், மனத் துயரம், மன மகிழ்ச்சி, எதிர்கால பயம் அல்லது வியாதிகளால் பயம் அல்லது விடுதலை, கடன் அடைத்தல், மாட மாளிகைகள், சொத்துக்கள், இடது கண், பொது ஜன விரோதம், அங்ககீனம், வீரம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், படுக்கை, வேலை நீக்கம், சிறை வாசம், மனக் கொந்தளிப்பு, பொல்லாத்தனம், அற்புதத் தன்மை, எதிர்பாராத பேரிடிகளை சந்தித்தல், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, மரணம், வெளியூர் அல்லது அந்நிய தேச வாசம், மனைவியின் மரணம், துக்கம், கால்கள், இடது கண், நஷ்டம், இறங்கு முகம், விரையம், உளவாளி, கோள் சொல்தல், கடைசி நாட்கள், வறுமை, பாபங்கள், சயன சுகம் அல்லது சுகமின்மை, காவலில் வைக்கப் படுதல், மோட்சம், இராஜ தண்டனை முதலியவற்றை அறியலாம். பொதுவாக 12ம் வீட்டின் மூலம் பண விரையம், கஷ்டங்கள், சிறைவாசம், எதிரி முதலியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் சனி பகவான்.
இது வரை 12 ராசிகளும் நமக்கு என்ன விதமான பலன்களைச் செய்கின்றன என்றும், அந்த பலன்களைச் செய்யும் கிரகங்கள் என்னென்னவென்றும் பார்த்தோம். அதாவது ஒரு பலனை ஒரு ராசி செய்கிறது என்றால் அந்த வீட்டின் பலனை அதில் இடம் பெற்றிருக்கும் கிரகமும் சேர்ந்து செய்யும் என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்த உடன் அந்த மனிதனின் ஜாதகத்தில் இடம் பெறும் கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இடம் பெறுகின்றன என்பதையும் அந்த ராசியின் பலன்கள் என்னென்ன என்பதையும், அந்த ராசிகளில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் எந்தெந்த விதத்தில் நன்மைகள் அல்லது தீமைகளைச் செய்கின்றன என்பதையும் மிகத் துல்லியமாக ஆராய வேண்டும். இனி அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.


1 கருத்து: